சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகேவால் (Wasantha Mudalige) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நிதியமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் பலர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
16.4 பில்லியன் அமெரிக்க டொலர்
சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான கடன், 05 முதல் 07 வீதத்திற்கு இடைப்பட்ட வட்டி விகிதத்தில் பெறப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளதுடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 8.2% சதவீதத்தை அரசு உயர்த்திய பின்னர் 7.4% ஆக குறைத்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்காக செலுத்த வேண்டிய 16.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன், 19.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து இலங்கை மக்கள் மீது பாரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடன்கள் அமெரிக்க சட்டத்தின் கீழ் பெறப்பட்டாலும் அந்த கடனில் ஒரு பகுதியை குறைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்த போதிலும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாமல் வட்டி விகிதத்தை அதிகரித்து இந்நாட்டு மக்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென மனுதாரர் மேலும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.