ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
அதன் படி, இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைப்பு
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, நேற்று (24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல்
அரசியலமைப்பின் 70 வது பிரிவின்படி 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் பிரிவு விதிகளுக்கு அமைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.