2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பணிகள் நாளை (01) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்கு
நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அத்துடன் அனைத்து அஞ்சல் வாக்காளர்களும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிறுவன தலைவர்களின் உறுதிப்படுத்தல்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் பத்திரத்தில் ஜனாதிபதி நேற்றைய தினம் (29) கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.