யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் (Jaffna) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 08 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் (Marudlingam Pradeepan) தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (03.10.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
வேட்புமனுக்கள்
அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் மொத்தமாக 86 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 28 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடனான வர்த்தமானி கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.