Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் பொருளாதாரக் குழுவுடன் தனது நெருங்கிய ஈடுபாட்டைத் தொடரும் நிலையில், தமது ஆதரவு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வுக்கான திகதியை நிர்ணயிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின் நிறைவிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சீர்திருத்த முயற்சிகளைத் தொடர்வதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பால் தாம் திருப்தியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்திற்கான பணிப்பாளர் கிருஸ்ணா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்த இலக்குகள்
இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாக இருப்பதாகவும், நாட்டின் பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆசிய பசுபிக் துறையின் பணிப்பாளர் கிருஸ்ணா சீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியக் குழு 2024 ஒக்டோபர் 2 – 4ஆம் திகதிகளில் கொழும்புக்கு விஜயம் செய்து சந்திப்புக்களை நடத்தியது.
இந்த விஜயத்தின் போது சீனிவாசன் குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத், மத்திய வங்கியின் ஆளுநர் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் சிறிவர்தன மற்றும் ஏனைய பங்குதாரர்களை சந்தித்துள்ளனர்.