நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை (Ampara) மாவட்ட ஆசன விடயத்தில் இழுபறியாக இருப்பதாக பொது கட்டமைப்பின்
மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட குடிசார் அமைப்பு, தமிழ் மக்கள்
பொதுச்சபை ஆகியவற்றின் இணைப்பாளருமான இராசலிங்கம் விக்னேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த ஜனாதிபதி
தேர்தலில் தேசத்தில் உள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டுகின்ற பணியை சிறப்பாக
ஒன்றிணைத்து முடித்திருக்கின்றேன்.
தமிழ் மக்களின் வாக்குகள்
அந்தவகையில் தமிழ் மக்களை தேசத்தில்
ஒன்றிணைத்து தமிழ் மக்களின் 2 இலட்சத்து 26,342 வாக்குகளை பெற்று
இலங்கை வரலாற்றில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றோம். அதன் பிற்பாடு உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் அடிப்படையில்
தமிழ் மக்கள் பொதுச்சபையாக இந்த விடயங்களை முன்னெடுத்திருந்தோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையாக செயற்படுவதில்லை என்ற
தீர்மானத்தில் இருக்கின்றோம்.
அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஒரு ஆசனத்தை இழக்கக்கூடிய
சூழ்நிலை இருக்கின்ற படியினால் இந்த அமைப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை
பிரதேசங்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என்ற முடிவிற்கு
வந்திருந்தோம்.
அந்த வகையில் இரு வாரங்களாக தமிழ் தேசிய கட்சிகளை
ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள
7 கட்சிகளுடன் கலந்துரையாடி இருந்தோம்.
இதனடிப்படையில் ரெலோ, புளொட்,
ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, இலங்கை
தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த 7 கட்சிகளுடன் நாங்கள்
ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்தோம்.
வீட்டுச்சின்னத்தில் போட்டி
இதில் ஆரம்பம் முதலே தமிழ் தேசிய மக்கள்
முன்னணி தாங்கள் தனித்து போட்டியிடுவதாக எமக்கு அறிவித்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சி நாங்கள் ஒன்றாக இணைய வேண்டும் ஒன்றாக
கேட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக இருந்தனர்.
இந்நிலையில் நாங்கள்
அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக
நாங்கள் ஒன்றிணைந்து கேட்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
இருந்த போதிலும் எமது
தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனவும் ஏனைய
கட்சிகள் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் என கூறி இருந்தார்கள்.
எனினும் இதர
கட்சிகளின் உயர்மட்டங்கள் எடுத்திருந்த முடிவின் படி அம்பாறை மாவட்டத்தில்
சங்கு சின்னத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் வீட்டு சின்னத்திலும்
போட்டியிடுவதாக கூறி இருந்தனர்.
இந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாறமாட்டோம் என இதர கட்சிகள்
கூறி தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களின் கோரிக்கையை
ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன்பிரகாரம் சங்கு சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில்
போட்டியிடும் நிலைப்பாட்டை மாற்ற முடியாது என கூறி 5 இதர கட்சிகளும்
இருந்தார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் வர தயாரில்லை என
கூறினர்.
கல்முனை பிரதேச செயலக விவகாரம்
அதுமாத்திரமன்றி அம்பாறையில் தனித்து போட்டியிடுவதாகவும் கூறி
இருப்பதால் நாங்கள் மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருக்கின்றோம். குடிசார்
அமைப்புகளாக நாங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என்ற மனவருத்தமான செய்தியை
மக்களாகிய உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
இரவுக்குள் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கின்றது. இதற்கு காரணம் தற்போதும் பேச்சுவார்த்தை முற்றுப்பெறாது சூம்
தொழிநுட்பம் வாயிலாகவும் நடைபெறுவதாக அறிகின்றோம்.
அம்பாறை மாவட்டத்தின்
ஆசனத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் நன்றாக சிந்தித்து ஒரு குடையின்
கீழ் எல்லோரும் ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளையும்
நாங்கள் அழைக்கின்றோம். இந்த செய்தியை தமிழ் மக்களுக்கு அறிவிக்கின்றோம்.
தமிழ்
மக்கள் சிறந்த முடிவினை எடுப்பார்கள். அவ்வாறில்லை எனில் பொருத்தமானவர்களை
தெரிவு செய்வதற்கு தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைக்கின்றோம்.
நேர்மையானவர்களாக, கறைபடியாதவர்களாக, தமிழ் மக்களில் அக்கறை கொண்டவர்களாக,
தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக, கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை
தீர்ப்பதற்கு அக்கறை உள்ளவர்களாக, தமிழ் உணர்வாளர்கள் யார் என்பதை மக்கள்
தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்“ என தெரிவித்தார்.