மகிந்தானந்த அளுத்கமகேவின் அரசியல் கோட்டையாக மாறியிருந்த நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியை மக்களின் ஆதரவுடன் அநுரகுமார திஸாநாயக்க உடைத்தெறிந்து அமோக வெற்றியை பதிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால் காந்தா தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது 8 பகுதிகளாக பிளவுபட்டுள்ளது.
பொதுத் தேர்தல்
ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிக்கலை சந்தித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் திசைகாட்டி சுற்றித் திரண்டு வருகின்றனர்.
தற்போது நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுகளுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும்” என தெரிவித்துள்ளார்.