தமிழ் தேசியப்பரப்பில் கொலை செய்யாதவர்கள்,கடத்தல்
செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில்
மட்டுமே போட்டியிடுகின்றனர் என
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள
வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் மட்டக்களப்பு கல்லடியில்
உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மோசடிகளில் ஈடுபடாத வேட்பாளர்கள்
மேலும் தெரிவிக்கையில், “நீண்டகாலத்திற்கு பின்னர் தூய்மையான தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களைக் கொண்டு கட்சி களமிறங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் தமிழ்
வேட்பாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது எமது வேட்பாளர்கள் சிறந்த
வேட்பாளர்கள் என்ற கருத்து நிலவுகின்றது.
எமது கட்சியில் ஊழல் அற்ற, கடந்த
காலத்தில் மோசடிகளில் ஈடுபடாதவர்கள் வேட்பாளர் பட்டியலில்
உள்வாங்கியுள்ளோம்.
ஏனைய கட்சிகள் இது தொடர்பில் பேசமுடியாது.கடந்த காலத்தில்
ஊழல் மோசடிகளில் அதிகளவில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில்
போட்டியிடுகின்றார்கள்.
கடந்த காலத்தில் எமது கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது சிலசில விமர்சனங்கள்
இருந்தது.
ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு தமிழரசுக்கட்சியை
ஆதரிக்ககூடிய வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
நான்கு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தாலும் கூட இலஞ்சம், ஊழல்மோசடி, காணி
அபகரிப்பிலேயே அவர்களின் காலங்களை கடத்தியிருந்தார்கள்.
இன்னுமொருவர் இதுதான்
நான் இறுதிமுறை என்று தேர்தலில் போட்டியிட்டு, அவரது கூடுதலான காலத்தினை
இலண்டனில் கழித்துவிட்டு தேர்தலில் குதித்திருகின்றார்.
அந்த வகையில் தமிழரசுக் கட்சி சார்பாக
போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற ஒரேயொருவர் நான் தான் என்று மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்
எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.
இந்நிலையில், நாங்கள் மட்டக்களப்பு
மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை பெறவேண்டும் என்பதற்காகவே
உழைத்துக் கொண்டிருக்கின்றோம்” என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.