முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசியவாதிகளால் திசைதிருப்பப்பட்டு வருகிறது என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தமிழ் அரசுக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், கூறுகையில், “போலித் தமிழ்த் தேசியவாதிகளால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக் கோரியவர்கள் இவர்கள்தான்.
இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகளே மதுபானச்சாலை அனுமதி பத்திரங்களைப் பெற்று விற்றுச் சம்பாத்தியம் செய்கிறார்கள்.
இந்தப் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும் ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாகப் பொதுவேட்பாளரை நிறுத்தியிருந்தன.
இதன் போது இரண்டு தரப்பினருக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான குறியீடாக மட்டுமே கருதப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை
இத் தேர்தலில் கட்சிகளைக் கடந்து தமிழினமாகச் சிந்திப்போம் என்ற கோசம் முன்வைக்கப்பட்டது. பொதுவேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளைக் கொண்ட உறுப்பினர்களும் தொண்டர்களுங்கூட பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குப் பெருமளவில் வாக்களித்திருந்தார்கள்.
தமிழ் மக்கள் பொதுச்சபை நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக ஈடுபடமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் இப்போது தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற அமைப்பு இல்லை.
இரண்டு தரப்புகளும் இணைந்து இறுதியாக நிகழ்த்திய கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும் பங்கேற்று தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாகப் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளாவிடில் தமிழ்த் தேசியப் பசமை இயக்கம் இந்த அணியில் இடம்பெறாது என்று மிகத் தெளிவாக தெரியப்படுத்தியிருந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.