கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதிகளை பெற்றார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (16.10.2024) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த ஆட்சி காலத்தில் பெறபபட்ட மதுபான சாலைகள் தொடர்பான விபரங்களை அநுரகுமார திஸாநாயக்க வெளியிடுவேன் என தெரிவித்தார்.
சந்தேகம்
தற்போது சில வாரங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பை நடத்திய அக்கட்சியின் பிரமுகர் வசந்த சமரசிங்க மதுபான சாலைகளை பெற்றவர்கள் மற்றும் சிபாரிசு செய்தவர்களின் விபரங்களை வெளியிடப்போவதாக சொன்னார்.
ஆனால், மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த பட்டியல் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நான் மதுபான சாலை அனுமதிப்பத்திரத்தை பெறவில்லை என தெரிவித்து சத்தியக்கடதாசியை தயாரித்து அதனை வெளிப்படுத்தியுள்ளேன். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.