வடமாகாண மட்ட சிங்கள தின போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம் (18)
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோட்டக்கல்வி
அலுவலக கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதற்கு எந்த விதமான அடிப்படை ஏற்பாடுகளும்
இல்லாத நிலையில் வடமாகாண கல்வி திணைக்களத்தினால் குறித்த போட்டி நிகழ்வுகளுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக நடுவர் குழு உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் பல்வேறு
பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களை நடுவர்களாக
நியமித்தமை தொடர்பில் பல்வேறுபட்ட ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் இன்மை
இந்தநிலையில் இது தொடர்பான ஆட்சேபனைகளை வெளியிட்ட பெண் ஆசிரியர் ஒருவரை கல்வித்
திணைக்கள அதிகாரி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில்
செயற்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எனினும். பல்வேறுப்பட்ட
சர்ச்சைகள் குழப்பங்களுக்கும் மத்தியில் நேற்றையதினம் இந்தப் போட்டி
நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன.
ஒரு மாகாணமட்ட போட்டி என்பது ஏற்கனவே உரிய முறையில் அனைத்து விடயங்களையும்
கவனத்தில் கொண்டு திட்டமிட்டு இருத்தல் வேண்டும்.
ஆனால் எந்தவிதமான அடிப்படை
வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் இந்த போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதை
அறிய முடிகின்றது.
குறிப்பாக 8.30 மணிக்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி
வளாகத்திற்கு மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத் தூரப்
பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இந்தப் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொள்ள
வேண்டிய தேவை இருந்தபோதிலும் இலகுவில் அடையக்கூடிய ஒரு இடத்தில் இந்தப் போட்டி
நிகழ்வுகள் நடாத்தப்படவில்லை.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஐந்து மாவட்ட மாணவர்களும் இலகுவில் செல்லக்கூடிய
ஒரு மத்திய நிலையத்தில் இந்த போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
இவ்வாறான ஒழுங்குபடுத்தல்கள் பெரும் அசௌகரியங்களை மாணவர்களுக்கும்
பொறுப்பாசிரியர்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றது.
இப்போட்டிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கோட்டக் கல்வி அலுவலக வளாகமானது
துப்பரவு செய்யப்படாது குப்பைகள் நிறைந்த பாதுகாப்பற்ற ஒரு பகுதியாகவே
காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த பகுதியில் மாணவர்கள்
தங்குவதற்கு எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யப்படாது கதிரைகள் இடப்படாது
இருந்ததனையும் பொறுப்பாசிரியர்களும் பெற்றோரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கே காணப்பட்ட ஒரு கொட்டகையானது பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்கதாகவும் கூரை
பொறிந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் இந்த கூரை விழுந்தால் பல
மாணவர்களுக்கு உயிர் ஆபத்து கூட ஏற்படக்கூடிய நிலை காணப்பட்டதாகவும்
பெற்றோரும் ஆசிரியர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு உள்ளதா பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என பல ஆயிரம்
ரூபா செலவில் சீர்செய்யும் அதிகாரிகள் சிறுவர்களை ஓர் இடத்தில் ஒன்று
கூட்டும்போது பாதுகாப்பு மற்றும் வசதிகளையும் கவனத்தில் எடுப்பதற்கு தவறுவது ஏன் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்
இந்த வளாகத்தில் குடிநீர் வசதி எதுவும் மாணவர்களுக்காக செய்து
கொடுக்கப்படவில்லை 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியதாக கூறப்படும் போட்டி நிகழ்வில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாமல் இருந்தமை மாணவர்களை மன
உளைச்சலிற்கு உள்ளாக்கியுள்ளது.
போட்டி நிகழ்வுக்காக மாணவர்களுக்கும்
சிற்றூண்டி, குளிர்பான வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒதுக்கீடுகள்
செய்யப்பட்டிருந்த போதிலும் அவை உரிய முறையில் பகிர்ந்து வழங்கப்படவில்லை.
கல்வித் திணைக்கள அதிகாரிகள் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் அருந்துவதை
கண்ட சில மாணவர்கள் தாக மிகுதியால் அவர்களிடம் கையேந்தி நின்று அதனை
பெற்றதாகவும் அதன் பின்னர் சில மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும்
குளிர்பானம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு வழங்கி
அவர்கள் ஊடாக அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் செய்திருக்க
முடியும்.
அவ்வாறான நடவடிக்கை எவையும் இங்கு இடம் பெறவில்லை.
வலயரீதியாக சுழற்சி முறை
இனிவரும் காலங்களிலாவது
ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இலகுவில் அடையக்கூடிய ஒரு இடத்தினை
தெரிவு செய்து இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெறுதல் வேண்டும் அப்படி
இல்லாவிட்டால் வலயரீதியாக சுழற்சி முறையில் இந்த போட்டிகள் இடம் பெற வேண்டும்.
ஆங்கில தினம், தமிழ்மொழி தினம், சிங்கள மொழி தினம் உள்ளிட்ட அனைத்து வகையான
போட்டிகளுக்கும் அனைத்து வலயங்களிலும் சுழற்சி முறையில் வைக்கப்பட்டால்
இவ்வாறான பிரச்சினைகள் எழுவதற்கான போக்குவரத்து ரீதியான பிரச்சினைகள்
எழுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும்.
அவ்வாறு இல்லாமல் ஒரு சிலரின்
தான்தோன்றித்தனமான முடிவுகளால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும்
பாதிக்கப்படுதல் கவலைக்குரிய விடயமே.
இது தொடர்பாக வடமாகண ஆளுநர் ஒரு
விசாரணையை நடாத்தி இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான போட்டி நிகழ்வுகள் புதிய
கட்டமைப்புடனும் உரிய ஏற்பாடுகளுடனும் மாணவர்களை அசௌகரியத்திற்க்கு
உள்ளாக்காத வகையில் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும்
ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.