நாடாளுமன்ற தேர்தலில் (Parliamentary election) போட்டியிடுவதற்காக வன்னி (Vanni) மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவை நிராகரித்தமை குறித்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று (23) வழங்கப்படவுள்ளது.
குறித்த வேட்புமனுவை நிராகரித்து மாவட்ட தேர்தல் அதிகாரி எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் கட்டளையொன்றை வெளியிடுமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை இன்று அறிவிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுவை, தற்போதுள்ள சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஏற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அதன்படி, இது தொடர்பான தீர்ப்பு மற்றும் அதற்கான காரணங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இரண்டு வேட்பாளர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், வன்னி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி உட்பட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் தாம் வேட்புமனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த வேட்புமனுவை தெரிவத்தாட்சிஅதிகாரி முறையாக சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி அதனை ஏற்க மறுத்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்துள்ள நிலையில், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தமது வேட்புமனுவை நிராகரித்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும், மேற்படி தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை வன்னி மாவட்டத்திற்கான பொதுத் தேர்தல் வாக்கெடுப்பை நவம்பர் 14ஆம் திகதி நடாத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமெனவும் அந்த மனுவில் மேலும் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.