ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayake) தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என பிரதமர் ஹரிணி அமசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று குறிப்பிட்டுள்ளது.
நாடு நிச்சயம் கட்டியெழுப்பப்படும்
இதேவேளை தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எமக்கு இடையில் போட்டி இல்லை எனவும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் எப்போது முடிவுக்கு வரும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அச்சம் இல்லாத வகையில் இந்த நாடு நிச்சயம் கட்டியெழுப்பப்படும் என பிரதமர் மக்களிடம் தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மூன்று சதவீதமாக இருந்த போதிலும், நாங்கள் இந்தப் போராட்டத்தை கைவிடவில்லை.
அன்று சிரித்தவர்கள் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஓடிவிட்டனர் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.