எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்காளர் தளம் 10 வீதமாக அதிகரித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்(sagara kariyawasam) இன்று (28) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 34 நாட்கள் கடந்துள்ள நிலையில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளின்படி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான வாக்காளர்கள் தளம் வீழ்ந்துள்ளமை தெளிவாகின்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்காளர் தளத்திற்கு ஒரு மாதம் மற்றும் 4 நாட்களுக்குள் இவ்வளவு விரைவான வளர்ச்சியை வழங்கியதற்காக எல்பிட்டிய மக்களுக்கு நன்றி வழங்குவதாகவும் அவர் கூறினார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுன 50 வீதம் ஆக வீழ்ந்துவிட்டது என்று கூறியவர்களுக்கு எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் கூறிய அவர், மொட்டு தலைவர்களுக்கு உகண்டாவில் பணம் உள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து தற்போதைய அரசாங்கம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தவறுகளை திருத்திக் கொள்ள எல்பிட்டிய தேர்தல் முடிவு நல்லதொரு வழியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி ஆட்சியில் இருக்கும் இந்த நேரத்திலும் நாட்டைப் பற்றி சிந்திக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக காரியவசம் தெரிவித்தார்.
மகிந்தவை விமர்சித்த அநுரகுமார
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கும் போது, நாட்டு மக்கள் கடன் வாங்குகின்றனர், எதிர்கால சந்ததியினர் கடன் வாங்குகின்றனர் என தற்போதைய ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வருகிறார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடன்களினால் நாட்டுக்கு நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் கிடைத்துள்ளதாகவும் தாமரை கோபுரங்கள், பாரிய அபிவிருத்தி திட்டங்கள்,மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடன் வாங்காது என்று கூறிய அநுரகுமார அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிநாட்டுக் கடன்களையும் பத்திரப்பதிவுக் கடனையும் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் சுவர்களை இடித்து கதவுகளை உடைத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.