13ஆவது சீர்திருத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தலானது நடாத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இடம்பெற்ற விசேட கலந்துறையாடலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களது காணிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் வீதிகளையும், காணிகளையும் விடுவிப்பதாக கூறுகின்றனர். ஆனால் சில பகுதிகள் மாத்திரமே விடுவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான பகுதிகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. அந்தப் பகுதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
நாங்கள் தேசிய கட்சியில் இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. எனினும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ஏற்ப சூழ்நிலைகள் அந்த கட்சிகளுக்குள் காணப்படவில்லை.
தமிழ் பௌத்தம்
தமிழ் பௌத்தமானது தமிழ் பௌத்தமாகவே பேணப்பட்டிருந்தால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் பௌத்தர்களும் இருந்திருப்பார்கள். தமிழ் பௌத்த தொல்லியல் சின்னங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
இருப்பினும், தொல்லியல் திணைக்களமானது மக்களது காணிகளை அபகரிக்கும் ஒரு நிலையிலேயே காணப்படுகிறது. ஆகையால் தமிழ் பௌத்த சின்னங்கள் கூட அழிவடையக்கூடி சந்தர்ப்பம் காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.