Courtesy: Sivaa Mayuri
ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து தேர்தல்கள் ஆணையகம் வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ரணிலின் ஆதரவுப் பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலைக்கு தம்மை தாமே நியமித்துக்கொண்டதாக கூறி ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று அவசரமாக கூடியுள்ளனர்.
கடந்த பொதுத்தேர்தலில் கட்சி இரண்டு தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய பட்டியல் ஆசனங்களை வென்றுள்ளது. இந்தநிலையில் இதில் ஒரு ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மற்றையதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ள, பொதுஜன பெரமுன அணிக்கும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை
இதன் அடிப்படையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளவர்களை நியமனம் செய்வதற்காக கட்சி நாளை (19) கூடுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் அனுமதியின்றி கருணாநாயக்கவை தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைத்து, கருணாநாயக்கவின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, கருணாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
இந்தநிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இன்று மாலை அவசரமாக கூடியது. எனினும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில், தாம் தேசிய பட்டியலுக்காக பரிந்துரைக்கப்பட்டமையை ரவி கருணாநாயக்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேநேரம் தேர்தல்கள் ஆணையகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் அவரை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானியையும் வெளியிட்டுள்ளது.