பா. சத்தியலிங்கத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியில் உறுப்பினர் ஆசனத்தை வழங்கியதை வன்மையாக
கண்டிக்கின்றோம் என அக்கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று(19.11.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலிலே வடகிழக்கு மாகாணங்களில்
போட்டியிட்டவர்களில் கிழக்கை சேர்ந்த அனேகமானவர்கள் எமது கட்சி சார்ந்து வெற்றி
பெற்றிருக்கின்றார்கள்.
பல் சமய கட்டமைப்பு
கிழக்கு மாகாணத்தில்தான் பல் சமயங்கள் சார்ந்த
கட்டமைப்புக்குள் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன்
ஆகியோர்கள் இருந்தும்கூட எனது தமிழ் மக்கள் எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழரசு கட்சிக்கு வழங்கியதற்காக எனது மக்களுக்கு
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நியாயமான எமது உரிமை
கடந்த காலங்களிலே எமது பகுதிகளில் கொள்ளைகள், மண் கொள்ளை, ஒப்பந்தங்களில் மோசடி,
இவ்வாறு பல பல கமிஷன் வியாபாரங்கள், கடந்த கால அரசின் காலத்திலே நடைபெற்றதை
மக்கள் அறிவார்கள்.
அதன் நிமிர்த்தம் அதன் மனசாட்சியின் அடிப்படையில்
எப்பொழுதும் நீதியான நியாயமான எமது உரிமைகளை தட்டிக் கேட்கின்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக்கட்ச்சி என்பதை உணர்ந்து
கிழக்கு மாகாணத்திலே அதிகளவு ஆசனங்களை எமது கட்சி கைப்பற்ற கூடியதாக இருந்தது’’ என்றார்.