சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு விலகி சென்ற குழுவினரை மீண்டும் இணைப்பதற்கான அரசியல் சூழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, நாடாளுமன்றத்திற்குள் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற குழுவினரை இணைத்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மூன்று உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களும் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களையும் இந்த குழுவில் சேர்ப்பது குறித்து கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் செயற்படவுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு போதியளவு உறுப்பினர்கள் இருப்பதால், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.