Courtesy: Sivaa Mayuri
தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதன் மூலமும், நாட்டின் பல மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு, இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தீர்வுகாண வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின் தவறான விதிகளை அகற்றுவதற்கும், சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து தனியான பொது வழக்குகள் இயக்குநரகத்தை ஸ்தாபிப்பதற்கும், ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடுவதற்கும் அநுரகுமார உறுதியளித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் பிற அடையாளக் குற்றங்கள் குறித்து அவரது அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட விசாரணைகளை அறிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
அதேபோன்று, உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதில் முன்னைய நிர்வாகங்களின் தோல்விகளை, அநுரகுமாரவின் அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.
அந்த வகையில், நாட்டை நீண்டகாலமாக பிளவுபடுத்திய சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பாகுபாடுகளை சகித்துக்கொள்வது உட்பட, மனித உரிமைகள் பிரச்சனைகளின் கடினமான பட்டியலை ஜனாதிபதி திஸாநாயக்க எதிர்கொள்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.
அநுரகுமாரவின் புதிய நிர்வாகம், பல தசாப்தங்களாக கடுமையான மீறல்கள், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தும் முறைகேடான பாதுகாப்புப் படை நடைமுறைகளை கட்டுப்படுத்தவேண்டும் என்று மீனாட்சி கோரியுள்ளார்.
இதேவேளை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்களை முன்னைய அரசாங்க நிர்வாகங்கள் துன்புறுத்தியுள்ளன மற்றும் அச்சுறுத்தியுள்ளன.
அதேநேரத்தில், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில், முன்னதாக விசாரணை ஆணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான சாட்சியங்களின் அடிப்படையில் ஜனாதிபதி திஸாநாயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
புதிய அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு முழுத் தடை விதிக்க வேண்டும் மற்றும் சித்திரவதையின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட மீதமுள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும்.
நீண்டகால கோரிக்கை
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் 2015-19க்கு இடையில் பகுதியளவில் விசாரணை செய்யப்பட்ட அடையாள வழக்குகள் உட்பட கடுமையான குற்றங்கள் பற்றிய நியாயமான மற்றும் முழுமையான விசாரணைகளை உறுதி செய்ய வேண்டும்.
சமூக நலச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான அமைச்சின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தை கொண்டு வரவேண்டும்.
அதேநேரம், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, இந்துக் கோயில்கள் போன்ற சிறுபான்மை மதத் தலங்களை ஆக்கிரமிக்கும் நடைமுறையை புதிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2021இல் முந்தைய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவதற்கும், திருநங்கைகளை குறிவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும்.
மேலும், பெண்கள் உரிமை இயக்கத்தின் நீண்டகால கோரிக்கையை ஆதரிக்க வேண்டும். நாட்டில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் கண்காணிப்பகம் இலங்கையின் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது.