Courtesy: Sivaa Mayuri
நாட்டில் ஊழலற்ற அமைப்பை நிறுவுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் ஊழலற்ற நிர்வாக அணுகுமுறை, முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று, இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஊழலற்ற அமைப்பை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எந்த நேரத்திலும் ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
75 வருடகால நட்பு
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று புதன்கிழமை சந்தித்த போதே உயர்ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 75 வருடகால நட்பை எடுத்துரைத்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், தொடர்ந்தும் நெருங்கிய உறவுகளை வளர்ப்பதற்கும், தமது நாட்டின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு, கடல்சார் விவகாரங்கள், டிஜிட்டல் மயமாக்கல், பொதுத்துறை நவீனமயமாக்கல், தொழிற்கல்வி மற்றும் எரிசக்தி துறை போன்ற துறைகளில் அவுஸ்திரேலியாவின் சாத்தியமான தொழில்நுட்ப ஆதரவு குறித்தும், இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.