லண்டனில்(Loandon) இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில், பெண்ணொருவரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ். நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(27.11.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கைப்பையை பறி கொடுத்த பெண் , 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற அலுவலக உதவியாளர் என கூறப்படுகின்றது.
கைது நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “திருடப்பட்ட கைப்பையில் (£ 2,700) சுமார் 1,423,500 ரூபா பணமும், இரண்டு புதிய (iPhone) ஐ போன்கள் மற்றும் இரண்டு புதிய சாம்சங் போன்கள் இருந்துள்ளன.
இந்நிலையில், விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அவரது கைப்பை காணாமல் போனதை உணர்ந்த அந்த பெண், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, உடனடியாக விமானத்தில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், கைப்பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்பின்னர், விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் BIA இல் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் புலனாய்வாளர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய(BIA) காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, பயணிகளையும் , அவர்களின் பொருட்களையும் சோதனை செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடாவில் வசிக்கும் இரட்டைக் குடியுரிமை பெற்ற 60 வயதுடைய கணக்காளர் ஒருவரிடன் கைப்பை இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் நடவடிக்கை
கைப்பை மீட்கப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை விமானத்தில் ஆறு மது போத்தல்கள் மற்றும் மூன்று வாசனை திரவியங்கள் வாங்க பயன்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் புலனாய்வாளர்களால் விமான நிலைய(BIA) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், விமான நிலைய (BIA) காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் இன்று(28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.