ஆட்சியைக்
கைப்பற்ற வேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சஜித்
பிரேமதாஸ தலைமையிலான எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டும்.
இல்லையேல் அநுர அரசுதான் பலமடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்
விதாரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அநுர அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியா, தோல்வியா
என்பதைக் குறிப்பிட முடியாது. பொதுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிரதான
எதிர்க்கட்சியான நாங்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஆட்சி அதிகாரம் கைப்பற்றல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை இளவரசர் என்று
நாங்கள் குறிப்பிடப்போவதும் இல்லை. அவ்வாறு ஏற்கப்போவதும் இல்லை. அதற்கான
அவசியமும் கிடையாது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்
தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் செயற்படுகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஹரின் பெர்னான்டோ, நாமல் ராஜபக்ஷவைக்
கடுமையாக விமர்சிப்பார், பின்னர் புகழ்வார். அது அவரது பழக்கம் என்பதை மக்கள்
நன்கு அறிவார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கம் எமக்குக்
கிடையாது.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய
மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டும். இல்லையேல் அநுர அரசுதான் பலமடையும் என்றார்.

