Courtesy: Sivaa Mayuri
மின்சாரக் கட்டணத்தை குறிப்பிட்ட வித்தியாசத்தில் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுவது போல் அதற்கு மூன்று வருடங்கள் தேவைப்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடுத்த மூன்று வருடங்களுக்குள் 30 வீதத்துக்கும் அதிகமான வீதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கும் என்று வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
மின்சார விலைகள்
எனினும், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர், எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை நியாயமான வரம்பிற்குள் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அரசாங்கம், பொதுமக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள், பல்வேறு நிறுவனங்களுடன் கட்டணங்களை பிணைத்ததால், சில விலை திருத்தங்களை தற்போதைய அரசாங்கத்தின் விருப்பப்படி செயற்படுத்த முடியாதுள்ளது.
இருப்பினும், மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தாமல் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை குறைக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.