சபாநாயகர் அசோக சபுமல் ரன்வெல (Ashoka ranwala), ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளது.
இந்நிலையில், அசோக சபுமல் ரன்வால என்னும் நபர் தமது பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லை என அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
சபாநாயகரின் அறிக்கை
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இவற்றிற்கு மத்தியில் ஜப்பானிய பல்கலைக்கழகம் வழங்கிய இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.