கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை (Mavai Senathirajah) சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் பதவி ஆசையில் இருக்கின்றார்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் என்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு சம்பந்தன் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தை சந்திக்கும் படி என்னை அறிவுறுத்தினார். இப்படியாகத்தான் நான் கட்சிக்குள் வந்தேன்.
தற்போது கட்சியில் இருந்து பதவி விலகிய தலைவர், பதவி ஆசையில் இருக்கின்றார் என்பதற்காக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
சிலர் மாவை சேனாதிராஜாவை வளர்த்த கிடா அவரது மார்பில் பாய்ந்தது என்று எழுதியிருந்தார்கள்.
அவர் என்னை வளர்க்கவுமில்லை, நான் அவருக்கு எதிராகப் பாயவும் இல்லை.
சிவமோகனால் எதிர்ப்பு
கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது சகல கதவுகளும் மூடப்பட்ட அறையில் தான் நடைபெற்றது.
இருப்பினும், மாவை சேனாதிராஜாவின் வருகையின் போது கதவு திறக்கப்பட்டது.
அந்த வேளையில் பேசப்பட்ட விடயங்கள் மாத்திரமே வெளியே நின்ற ஊடகவியலாளர்களுக்கு கேட்டது. அவை செய்திகளாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
எனினும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டத்திற்கு கொழும்பு, அம்பாறை, திருக்கோயில் உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்ட உறுப்பினர்கள் 10 மணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.
ஆனால், தலைவர் மாவை சேனாதிராஜா வரவில்லை. அது வழமையாக நடப்பது தான். நாங்கள் எல்லோரும் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
எனவே, இம்முறை மிகத் தாமதமானதால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு நான் கூறினேன். அதற்கு சிவமோகனால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் கட்சியின் சரிவை சீரமைப்பது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றோம் என்பது பற்றிப் பேச வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.