கடந்த ஒன்பது ஆண்டுகளாக கனடாவில் (canada)பிரதமராக பதவிவகித்து வரும் ஜஸ்டின் ரூட்டோ (justin trudeau)அவருக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
“கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்து நான் விலக விரும்புகிறேன், ”என்று 53 வயதான ஜஸ்டின் ரூட்டோ இன்று(06) திங்களன்று ஒட்டாவாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கனடாவிற்காக பாடுபட்டேன்
“2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன்.வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்” என்றார்.
தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
குடும்பத்துடன் நீண்ட ஆலோசனை
குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார்.
தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.