இலங்கையில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வங்கிகளில் ஏற்கனவே வைப்பு செய்யப்பட்ட சுமார் 300 மில்லியன் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பங்குச் சந்தையில் கணிசமான வளர்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிடித்தம் செய்யும் வரி
இந்நிலையில், நிலையான வைப்புகளுக்கான பிடித்தம் செய்யும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், அதிகளவான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக வங்கிகள் மட்டுமன்றி பிரபல நிதி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வைப்புத்தொகைகள்
இதேவேளை, மத்திய வங்கி ஆளுநரின் தகவலுக்கமைய, இலங்கையில் வங்கிகளில் 65 மில்லியன் வைப்புத்தொகைகள் உள்ளன. அவற்றில் சுமார் 1.7 ட்ரில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் நிதி வரம்பை அதிகரிக்கும் நோக்கில் வங்கிகளில் பெறப்படும் வட்டிகளுக்கு இந்த பிடித்தம் செய்தல் வரி அறவீடு செய்யப்படுகின்றன.
அதேவேளை நிலையான வைப்புக்களுக்கு வருடாந்தம் 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வட்டியாக பெற்றால் அதற்கும் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.