போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு(Jerom Fernando) எதிராக முறைப்பாடுகள் இருக்குமானால், அவற்றை,
மனுதாரர்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பலாம் என்று உயர்நீதிமன்றில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வெறுப்புப் பேச்சு பேசுவது
தொடர்பாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக இறுதி முடிவை எடுக்கும்போது,
இந்த முறைப்பாடுகளும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நேற்று
உயர்நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு
சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த துணை மன்றாடியார் நாயகம்,
சுதர்சன டி சில்வா சட்டமா அதிபரின் சார்பில் இந்த உறுதிமொழியை மன்றில்
வழங்கினார்.
மதத் தலைவர்கள் குழு ஒன்று, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின்
விசாரணையின் போது இந்த விடயத்தை சுதர்சன டி சில்வா மன்றின் கவனத்துக்கு கொண்டு
வந்தார்.
இதனையடுத்து மனுதாரர்கள் சார்பாக கூடுதல் முறைப்பாடுகளை சட்டமா அதிபருக்கு
அனுப்ப, மனுதாரர்களின் சட்டத்தரணி – சஞ்சீவ ஜெயவர்தனவுக்கு அதிகாரம்
வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதேவேளை போதகர் ஜெரோமின் பணமோசடி நடவடிக்கைகள் குறித்து குற்றவியல்
புலனாய்வுத் துறையின் விசாரணையில் மனுதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக,
சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தன நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டம் மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின்
கீழ் மீறல்களுக்காக போதகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முன்னிலையாக்கப்பட்டபோதும், அவருக்கு எதிரான விசாரணைகள் போதுமானதாக இல்லை
என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எல்லே குணவன்ச தேரர், பெங்கமுவே நலக தேரர், அங்குலுகல்லே ஸ்ரீ கினாநாத
தேரர், அருட்தந்தை நிசான் கூரே, சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு
சர்மா மற்றும் அல்-ஹாஜ்-அஸ்-செய்ட் ஹசன் மௌலானா ஆகியோர் ஜெரோம்
பெர்னாண்டோவுக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.