சீனா மற்றும் இந்தியாவுடன் உடன்படிக்கைகளை செய்துக்கொண்டதன் மூலம், தேசிய
மக்கள் சக்தியினர், தமது சொந்த வார்த்தைகளை தாமே மென்று சாப்பிடுவதாக பொதுஜன
பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவுக்கான பயணங்களை வெற்றிகரமாக முடித்ததற்காக ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவைப் பாராட்டிய அவர் இந்த கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
சீன நிறுவனங்களுடனான உடன்படிக்கை
தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியாக இருந்தபோது, அந்தக்கட்சியினர் இந்திய
மற்றும் சீன நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை முரண்பாடாகவே
கருதினர்.
தற்போது அவர்கள் உடன்படிக்கைகளை செய்துக்கொண்டுள்ள இந்திய மற்றும் சீன
நிறுவனங்களை, அன்று தேசிய மக்கள் சக்தியினர், சர்ச்சைக்குரியவை, ஊழல்
நிறைந்தவை என்று கூறினர் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தனது சொந்த வார்த்தைகளை மென்று, அந்த நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தாம் தற்போது உடன்படிக்கைகளை செய்துக்கொண்ட நிறுவனங்களை, முன்னர்
எதிர்த்தமை எதற்காக என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பொதுமக்களுக்கு
விளக்கவேண்டும் என்றும் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெளிவான திசை தெரியாமல் இன்னும் தெளிவற்றதாக இருக்கும் அவர்களின் வெளியுறவுக்
கொள்கை என்ன என்பதையும் அரசாங்கமும் விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.