தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு குறித்து இன்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
மனுஷவின் வாக்குமூலம்
அதன்படி, தனது கட்சிக்காரர் நாளை(21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், பின்னர் வேறொரு நாளில் இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக அழைக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வகையில், சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனு எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.