மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின்
வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பல பகுதிகளின் போக்குவரத்துகள்
பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான்
கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்
பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்டூர்-வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன்
காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கடமை
இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு
கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின்
போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள்
மூலம் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த
போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இராணுவத்தினரும்
பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துகள் பாதிப்பு
இதேபோன்று பாலையடிவட்டை-வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர்-ராணமடு
வீதி,வெல்லாவெளி – உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள்
பாதிக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான
பல்வேறு போக்குவரத்துப்பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திங்கட்கிழமை காலை 6 மணிவரையில் நவகிரிக் குளத்தின்
நீர்மட்டம் 31.அடி 5அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32அடி 8
அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 18அடி 3அங்குலம், கட்டுமுறிவுக்
குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலம், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 12அடி
3அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 11அங்குலம்,
வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாகவும்
அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிடத்தக்கது.