நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்குத் தாக்கல்
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.
244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
முன்னதாக இந்த பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் வெளியிட்டு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.