இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு உள்ளடக்கப்படும் வரியை மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான (VAT REFUND SYSTEM) கட்டமைப்பை விமான நிலையத்தில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(27) இடம்பெற்ற ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டில் 16.1 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை இந்த ஆண்டு 18.2 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கும் அதேநேரம், புதிய திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டில் வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்திக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதியை அதிகரித்தல்
இதற்கமைய, இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய, உள்நாட்டு உற்பத்தியை பலப்படுத்தி ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் அமைவிடம், மனித வளங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி நீண்ட கால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
அதன் மூலம் வீழ்ச்சியடைந்த உள்நாட்டு உற்பத்தித் தொழில்துறைகளுக்கு புத்துயிர் அளித்தல், ஏற்றுமதித் தொழில்துறைகளை போட்டித்தன்மை மிக்கதாக்குதல், சேவை தொழிற்துறையை ஊக்குவித்தல், புதிய கேள்விகள் மூலம் உலகச் சந்தையில் இடம்பிடித்தல், தேசியத் திட்டத்திற்கு அமைவாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை வரவழைத்தல், புதிய முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், குறைந்த செலவு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்ளீடுகள், விநியோகங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.