முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏதேனும் நேர்ந்தால் நாட்டில் கலவரம் வெடிக்குமென முன்னாள் பாதுகாப்பு துறை பிரதியமைச்சர் பிரமித பண்டாரகூன் (Premitha Bandara Tennakoon)கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கடந்த திங்கட்கிழமை (27) இரவு கொழும்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டி
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
எமது இடைக்கால அரசாங்கத்தின் தீர்மானங்கள் சரி என்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் மக்கள் இன்று உள்ளார்கள்.
பொதுஜன பெரமுனவுக்கு எதிராக நாங்கள் செயற்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான கௌரவம் இன்றும் அவ்வாறே உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகஜந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும்.
ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்) அணியில் நாங்கள் தற்போது இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (30) பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் எனத் தெரிவித்தார்.