ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த முடிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்ததையடுத்து அந்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட இராணுவ உதவி, உளவுத் தகவல்களை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
30 நாட்கள் இடைக்கால போர்
30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்ப்புக்கொண்டுள்ள நிலையில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
அதேவேளை, தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
போரை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புதின் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துவரும் உக்ரைன் – ரஷ்ய போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பாரிய” ட்ரோன் தாக்குதல்
போர்நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில், ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் “பாரிய” ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று (11.03.2025) அதிகாலை 4 மணிக்கு (01:00 GMT) நடந்த தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.