சதொச விற்பனை நிலையம் ஊடாக வழங்கப்படும் நிவாரண பொதியில் உள்ளடக்கப்படுவது சமபோசாவா, அல்லது சுபோசாவா என்பது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும், எதிர்க்கட்சியின் உறுப்பினர் டி.வி. சானகவுக்கும் இடையில் குறித்த வாக்குவாதம் நிலவியது.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற அமர்வில் கருத்து தெரிவித்த டி.வி. சானக,
சுபோச உற்பத்தி
“நான் ஹன்சாட் பதிவை கேட்டேன். இன்றும் இந்த விடயம் அச்சிடவில்லையாம். கிடைத்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்கின்றார்கள்.

மனதில் சுபோசாவை வைத்துக் கொண்டு, வாயில் சமபோசா என்று குறிப்பிட்டாரா? என்று தெரியவில்லை.
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்துள்ள 8 இலட்சத்து 7 ஆயிரம் பேருக்கு சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு 5000 ரூபா பெறுமதியான உணவு பொதியை 2500 ரூபாவுக்கு வழங்குவதாக வர்த்தகத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனை வரவேற்கிறோம்.
இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாடு அரிசி, பெரிய வெங்காயம் 2 கிலோ கிராம், உருளைக்கிழங்கு 2 கிலோகிராம், பருப்பு ஒரு கிலோகிராம், டின் மீன் ஒன்று, சிவப்பு சீனி 3 கிலோ கிராம், கோதுமை மா 2 கிலோகிராம், சமபோசா 2 பெக்கட், 4 சோயா மீட் பெக்கட் உள்ளடக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் இரண்டு சமபோசா பெக்கட்டுக்களை வழங்க வேண்டும்.
30 கோடி ரூபா வர்த்தகம்
சுகாதார அமைச்சின் கீழ் திரிபோஷா உற்பத்தி செய்யப்பட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
அதேபோல் சுகாதார அமைச்சின் கீழ் தான் சுபோச உற்பத்தி செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிவாரண பொதியில் 2 சமபோசா பெக்கட்டுக்கள் உள்ளடக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஏன் சுகாதார அமைச்சின் கீழ் உற்பத்தி செய்யப்படும் சுபோசாவை வழங்கவில்லை. இது 30 கோடி ரூபா வர்த்தகமாகும். வர்த்தகத்துறை அமைச்சு தனியார் நிறுவனத்திடமிருந்து சமபோசாவை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.
சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தான் சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவராக பதவி வகிக்கிறார்.” என்றார்.
இது தொடர்பில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க,
வர்த்தகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது நிவாரண உணவு பொதி தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கையில் அந்த பொதியின் உள்ளடக்கப்படும் பொருட்களை பட்டியலிட்டேன்.
சுபோச பெக்கட்டுக்கள்
அரச நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் சுபோச பெக்கட்டுக்களை வழங்குவதாகவே குறிப்பிட்டேன்.

எதிர்க்கட்சிகள் சுபோசவை ‘ சமபோசா’ என்று மாற்றிக் கொள்கிறார்கள்.
விலைமனுகோரல் ஊடாகவே பொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நிவாரண பொதியில் 200 கிராம் சுபோச பெக்கட்டுக்கள் இரண்டு உள்ளடக்கப்படும். சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யை சபையில் குறிப்பிடுவது கீழ்த்தரமானது.
அனைத்து பொருட்களும் அரச நிறுவனங்களிடமே கொள்வனவு செய்யப்படும்” என்றார்.

