வெட்டுக்குத்துக்களுக்கு பெயர் போன கட்சி தான் தமிழரசுக் கட்சி என்பது யாவருக்கும் தெரியும்.
ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தாம் நினைத்த எவரை வேண்டுமானாலும் பழிவாங்கிவிடும் வல்லமை பொருந்திய தலைமைகளைக் கொண்ட ஒரு கட்சிதான் தமிழரசுக் கட்சி.
கட்சியின் தலைமைகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கட்சிக்குள் புதிதாக அழைத்து வந்து தேர்தலில் போட்டியிடவைப்பார்கள். ஏன் என்று யாருமே கேள்வி எழுப்பமுடியாது.
அதேபோன்று கட்சியில் பல வருடங்கள் அங்கத்தவர்களாக இருந்தவர்களுக்கு வேட்பாளர் ஆசனம் வழங்காமல் நிராகரிப்பார்கள்.
காரணம் எதுவும் கூறாமலேயே யாரும் நிராகரிக்கப்படலாம். அல்லது ஏதாவது உப்புச்சப்பில்லா ஒரு காரணத்தைக் கூறி அவர்கள் நிராகரிக்கப்படலாம்.
‘தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு செவ்வி வழங்கினார்’ என்கின்ற ஒரே காரணத்துக்காக தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் ஒருவர் நிராகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக கட்சியின் உறுப்பினர்களே வழக்குத்தாக்கல் செய்து கட்சியை முடக்கிய சம்பவம் பற்றி தனது மனக்கவலையை ஊடகம் ஒன்றிடம் கொட்டித்தீர்த்திருந்தார் அந்த இளைஞன்.
இன்று அவருக்கு தேர்தலில் ஆசனம் கொடுக்காததற்கு அவர் ஊடகத்தில் பேசியதுதான் காரணமாம்.
‘அந்த ஊடகத்திடமே சென்று சீட்டுக் கேளுங்கள்..’ என்று கூறிச் சிரித்ததாம் அந்தப் பிரதேசத்துத் தலைமை.
‘போங்கடா நீங்களும் உங்கட கட்சியும்..’ என்று தூசுதட்டிவிட்டு தனது பணியைப் பார்க்கப்போய்விட்டாராம் பொறியிலாளரான அந்த ஆயுட்கால உறுப்பினர்.
தமிழரசுக் கட்சியை விட்டு புத்திஜீவிகள், தமிழ் தேசியவாதிகள், கல்விமான்கள் பலர் வெளியேறி, கடைசியில் வெறும் ஜால்றாக்கள் மாத்திரம்தான் அங்கு எஞ்சியிருப்பதாக கவலை வெளியிட்டார் – 50 வருடங்களாக அந்தக் கட்சியில் அங்கம் வகித்துவருகின்ற ஒரு பெரியவர்.