கொத்மலை (Kotmale) மற்றும் மஸ்கெலியா (Maskeliya) பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (20.03.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
நிர்வாக தவறு
நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில்
சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது.
ஏனைய தொகுதிகளில் எமது நிலைவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்.” என்றார்.
செய்திகள் : க.கிஷாந்தன்
திருகோணமலை மாவட்டம்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்,
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை
தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (20) மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு
வந்திருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 126
உம், சுயேட்சை குழுக்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் 12 உம் தாக்கல்
செய்திருந்தனர்.
அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பெயர் குறித்த நியமனப்
பத்திரங்கள் 23 உம், சுயேட்சை குழுக்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள்
03 உம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட
அரசாங்க அதிபருமான டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இம்முறை தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பெயர்
குறித்த நியமனப் பத்திரங்கள் 103 உம், சுயேட்சை குழுக்களின் பெயர் குறித்த
நியமனப் பத்திரங்கள் 09 உம் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.