போப் பிரான்சிஸை (Pope Francis) கௌரவிக்கும் வகையில், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் இன்று (21) இரவு அணைக்கப்படும் என்று பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo) அறிவித்துள்ளார்.
பாரிஸில் உள்ள ஒரு இடத்திற்கு போப் பிரான்சிஸின் பெயரை வைப்பதற்கும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக தலைவர்கள் இரங்கல்
அத்துடன், போப் பிரான்சிஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஸ்பெயின் நீதி அமைச்சர் பெலிக்ஸ் போலானோஸும் அறிவித்துள்ளார்.

ஒரு நல்ல மனிதர் மற்றும் ஒரு சிறந்த போப்பின் மறைவுக்கு ஸ்பெயின் இரங்கல் தெரிவிப்பதாகவும், பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் அமைச்சர் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி, போப் பிரான்சிஸ் உயிருடன் இருந்தபோது அவரை எதிர்த்த தலைவர்களும் அவருக்கு இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
போப் பிரான்சிஸின் மறைவு
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் (Pope Francis) இன்று (21) பிற்பகல் காலமானார்.

சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சமீபத்தில் குணமடைந்து திரும்பியிருந்த 88 வயதான போப், வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

