போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது போப் பிரான்சிஸ், இன்று (21) தனது 88 ஆவது வயதில் காலமானார்.
மறைந்த அவருக்கு உலகெங்கிலும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், அடுத்த போப் தேர்வு நடவடிக்கையை குறிக்கும் சடங்குகள் தொடங்கி உள்ளன.
பிரேத பரிசோதனை
தற்காலிக சேம்பர்லைனாக, 77 வயதான கார்டினல் கெவின் ஜோசப் பாரெல், மரணத்தை உறுதிப்படுத்தவும் ஆரம்ப ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும் பணிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் போப்பின் தனிப்பட்ட குடியிருப்பை சீல் வைத்து இறுதி சடங்குகளுக்காக போப் சவப்பெட்டியை எப்போது செயின்ட் பீட்டர் தேவாலயத்துக்கு பொது பார்வைக்காக கொண்டு செல்லப்படும் என்பதை முடிவு செய்வார்.

இறந்த போப் உடல் பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாது எனவும் துக்க சடங்குகள் ஒன்பது நாட்கள் நீடிக்கும் எனவும் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் செய்யும் திகதியை கார்டினல்களால் தான் தீர்மானிப்பர் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தல் முடிந்ததும், போப்பின் உடல் அவரது தனிப்பட்ட தேவாலயத்திற்கு மாற்றப்பட்டு அங்கு, அவரது பூதவுடல் ஒரு வெள்ளை நிற உடையணிந்து துத்தநாகத்தால் மூடப்பட்ட மர சவப்பெட்டியில் வைக்கப்படும்.
இறுதிச் சடங்கு பொதுவாக இறந்த நான்கு முதல் ஆறு நாட்களுக்குப் பிறகு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்.
புதிய போப்
இந்தநிலையில், புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில், போப் காலமான நாளிலிருந்து 15 முதல் 20 நாட்களுக்குள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனவே வாக்களிப்பு பல நாட்களில் பல சுற்றுகள் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்ததும், புதிய போப் அவர் ஏற்றுக்கொள்கிறாரா, எந்தப் பெயரை எடுக்க விரும்புகிறார் என்று கேட்கப்படும்.
தேவாலயத்தின் புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி சிறப்பு ரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை ஒரு அதிகாரி எரிக்கும் போது, ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் அறியும்.
பின்னர் புதிய போப் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

