கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Cardinal Malcolm Ranjith) வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பேராயர் இன்று (23) காலை 9:30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார்.
பரிசுத்த பாப்பரசரின் இறுதிச் சடங்கு
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வத்திக்கானால் வெளியிடப்பட்ட இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசரின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வத்திக்கானுக்குப் சென்றுள்ளார்.
இதேவேளை, போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

