முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவிக்கு காணப்படும் வெற்றிடங்களை அதே மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (Thurairasa Ravikaran) அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்காலங்களில் சிக்கல் நிலைமைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (03) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மையில் தேசிய மட்டத்தில் புதிய உத்தியோகத்தர்களை நியமிக்கும் பொருட்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எனும் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரசின் இந்த முயற்சியை வரவேற்கின்றேன்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களின் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு ஒரு ஆலோசனையைச் சொல்லலாமென நினைக்கின்றேன்.
இயலக் கூடியவகையில் அந்தந்த மாவட்டங்களின் வெற்றிடங்களை, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பும் போது, பின்னர் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளலாமென்பது என்னுடைய கருத்தாகும்.
இந்த விடயத்தை இந்த உயரிய சபையில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். இயலுமானால் இந்த கருத்தையும் ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/daRyk9tbb3g