திருகோணமலை (Trincomalee) – குச்சவெளி (Kuchchaveli) கடற்பரப்பில் வைத்து கடற்றொழிலாளர் ஒருவர் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.06.2025) அப்பகுதி மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
மிலேச்சத்தனமான தாக்குதல்
இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இதுபோன்ற மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது “பாமர மக்கள்மீது கடுமையான சட்டத்தை திணிக்காதே”, “தீவிரவாதிகள் இல்லை நாம் மீனவ தொழிலாளர்” அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




