கட்சிக்குள் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவின் மிரட்டல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரகசிய வாக்களிப்பு
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் இரகசியமாகவே தமது
வாக்குகளைப் பதிவு செய்தனர். இவ்வாறு இரகசிய வாக்குப் பதிவின் போது பிரஜைகள்
யாரிடமாவது இலஞ்சம் பெற்றிருக்கின்றனரா? இல்லையல்லவா? சுயாதீனமான ஜனநாயகமான
தேர்தலில் இரகசிய வாக்களிப்பும் ஒரு பகுதியாகும்.

இரகசிய வாக்களிப்பா?
இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்குரியதாகும்.
கொழும்பு மாநகர மேயர் தெரிவு எந்த வகையிலும் சட்டவிரோதமானதல்ல.
இறுதி
நேரத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தியினர் இரகசிய வாக்கெடுப்பு வேண்டாம் என்று
கூறினர்.
தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணியமைப்பதாக இவர்கள்
கூறவில்லை.
அவ்வாறிருக்கையில் தற்போது ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள்
சக்தி கூட்டணியமைப்பது மக்கள் ஆணையை மீறும் செயல் அல்லவா?
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்து முடிவுகள் வெளியான போது சஜித் தரப்பு
எழுப்பிய கோஷங்கள் இன்று சீதாவாக்கை நகர சபையிலிருந்து வெளிநடப்பு
செய்யுமளவுக்குச் சென்றுள்ளது.

மறுபுறம் தம்புள்ளையில் கட்சியின்
தீர்மானத்துக்கு முரணாக 6 உறுப்பினர்கள் செயற்பட்டிருக்கின்றனர். கட்சிக்குள்
ஒற்றுமையைப் பாதுகாக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்
மிரட்டல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.
சுயாதீன உறுப்பினர்களானாலும், ஏனைய கட்சி உறுப்பினர்களானாலும் உள்ளூராட்சி
சபைகளை முறையாக நிர்வகித்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், அதனை
எம்மால் தவிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

