கொழும்புக்கு வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர்
டர்க் 25ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் நேரடியாக
விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் போது அங்கு களச்சூழ்நிலை ஒழுங்காக
இருக்குமானால் அவர் செம்மணி மனிதப் புதைக்குழி இருக்கும் பகுதிகளையும்
நேரடியாகப் பார்வையிடுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க
இருக்கின்றார் எனவும் கூறப்பட்டது.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர்
சிவஞானம் சிறீதரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றுவர் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எம்.பிக்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கின்றதா என்பதை
அறியமுடியவில்லை. அவர்களும் அழைக்கப்படக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
சந்திப்புக்கள்
இன்று கொழும்பு வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இன்று(23.06.2025) மாலை நாடாளுமன்றக்
குழு அறையில் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களை ஒன்றாகச் சந்திக்கின்றார்.

எனினும், எதிர்க்கட்சிப் பிரமுகர்களைத் தனித்தனியாக அவர் சந்திக்கும்
வாய்ப்புகள் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரும் அதே சமயத்தையொட்டி இலங்கையின்
பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக அங்கு
பயணமாகின்றார் எனவும் கூறப்படுகின்றது.
அதனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
கொழும்பில் வந்து இறங்கிய கையோடு பிரதமருக்கும் அவருக்கும் இடையில் சந்திப்பு
நடப்பதற்கு வாய்ப்பு இருந்தால் மட்டுமே அந்தச் சந்திப்பு இடம்பெறும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
ஆயினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
சந்தித்துப் பேசுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின்
நிகழ்ச்சி நிரல் பற்றிய விடயம் இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை.
பெரும்பாலும்
இன்று மாலைக்கு பின்னர் அது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

