புதிய இணைப்பு
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சி உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தெரிவாகியுள்ளார்.
துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசார், உபதவிசாளர் தெரிவு
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (26-06-2025) நடைபெற்றது.
13 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் தவிசாளர் தெரிவிற்காக தமிழரசுக்கட்சி சார்பில் கனகரத்தினம்
செந்தூரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சிவகுமார்.
சிந்துஜன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழிக்கப்பட்ட நிலையில்
பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி
சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழுவின் ஊசி
சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலைமை வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியின்
சார்பில் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு கங்காரு சின்னத்தில் வெற்றி பெற்ற
ஒரு உறுப்பினரினதும் ஆதரவுடன் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினம் செந்தூரன் 06 வாக்குகளை பெற்ற நிலையில் சி. சிந்துஜன் 05
வாக்குகளை பெற்றார்.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தவிசாளராக
தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கரைதுறைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றிய தமிழரசுக்கட்சி
முல்லைத்தீவு (Mullaitivu) – கரைதுறைப்பற்று பிரதேச சபை (Maritimepattu PS) தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்
சின்னராசா லோகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர்
மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (26) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின்
ஆட்சி அமைப்பதற்காக எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத
நிலையில் வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
தவிசாளர் தெரிவு
தவிசாளர் தெரிவிற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா
லோகேஸ்வரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை
பவுள்ராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா
புஸ்பானந்தன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

21 உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசு கட்சியின்
உறுப்பினர் 11 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டமைப்பின் உறுப்பினர் 04 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 05 வாக்குகளையும் பெற்றிருந்தனர். தமிழரசுக் கட்சி உறுப்பினர் மகாதேவா
குணசிங்கராசா நடுநிமைமை வகித்தார்.
இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
நடைபெற்ற வாக்கெடுப்பு
அத்துடன் உபதவிசாளர் தெரிவிற்காக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன், சுயேட்சை குழு உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா
ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன் ஒன்பது
வாக்குகளையும் சுயேட்சை குழு உறுப்பினர்
வல்லிபுரம் வசந்தராசா ஆறு வாக்குகளையும் பெற்றுக்கொள்ள ஆறு உறுப்பினர்கள்
நடுநிலைமை வகித்தனர்.
இதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்
யோகேஷ்வரன் அனோஜன்
உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




