ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமைய வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் இலங்கையின் உள்ளகப் பொறிமுறைகள் ஊடாக எவ்வித
முன்னேற்றமும் அடையப்படவில்லை என்ற விடயமும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின்
பங்கேற்பு அவசியம் என்ற வலியுறுத்தலும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை
தந்திருந்தார்.
இதன்போது, அவர், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பிரதம நீதியரசர்,
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள்
உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியதுடன் திருகோணமலை,
யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அங்கும் பல
தரப்பட்ட குழுக்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
உள்ளகப் பொறிமுறை
அதுமாத்திரமன்றி விஜயத்தின் நிறைவு நாளன்று கொழும்பில் நடத்திய ஊடக
சந்திப்பில், சர்வதேசத்தின் ஆதரவுடன் உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும்
எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின்
பொறுப்புக்கூறல் நிலவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்
வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமைய வேண்டும் என்று
சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

“முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்
கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறுதான்
கோரப்பட்டிருந்தது.
இருப்பினும், அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், உள்ளகப் பொறிமுறை ஊடாக
எதனையும் செய்யமுடியாது என்பதைப் பேரவை புரிந்துகொண்டது.
சர்வதேசத்தின் பங்களிப்பு
அதனையடுத்து, 2014ஆம்
ஆண்டிலேயே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
அலுவலகத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் அனுசரணையுடன் பேரவையின்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே நாட்டில் காணாமல் போனோர் பற்றிய
அலுவலகம் நிறுவப்பட்டது.
அதன் விசாரணை செயன்முறைகளில் சர்வதேசத்தின் பங்கேற்பை உள்வாங்கக்கூடிய
வகையிலேயே அதற்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அலுவலகச்
செயன்முறைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பை உள்வாங்குவதற்கு எந்தவொரு அரசும்
இடமளிக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் உள்ளகப் பொறிமுறை ஊடாக எவ்வித
முன்னேற்றமும் அடையப்படவில்லை என்றும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின்
பங்களிப்பு அவசியம் என்றும் உயர்ஸ்தானிகர் அவரது அறிக்கையில் வலியுறுத்த வேண்டும்” என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம்
மட்டுப்படுத்தாமல், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை உள்ளிட்ட
ஏனைய கட்டமைப்புக்களுக்குள் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

