வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான
காணியினை பொலிஸார் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக பொது மக்களால்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு
சொந்தமான காணியை துப்புரவு செய்த ஓமந்தை பொலிஸார்
குறித்த இடத்தில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும்
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காணி உரிமையாளரை அச்சுறுத்தி
குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான
காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு
வருகின்றது.
எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக்காணி
தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம்
முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத
நிலையிலேயே பொலிஸார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே காணி உரிமையாளரை அச்சுறுத்தி துப்புரவு செய்ததாகவும் தெரிய
வருவதோடு, குறித்த காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து
குறித்த காணியை உரிய நபருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளனர்.

