செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சிறைக்கைதியாக இருக்கும் இராணுவச்
சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தின் அடிப்படையில்
பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக நீதிப் பொறிமுறையில் நீதி கிடைக்க
வாய்ப்பில்லை என்பதை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு நீதி
உதாரணமாக
செம்மணியில் நிர்வாணமாக கொல்லப்பட்ட தமிழர்களின் கொலைக்கு பொறுப்பான இராணுவ
உயர் அதிகாரிகள் சுதந்திரமாக வெளியில் இருப்பதாகவும் படுகொலை
செய்யப்பட்டவர்களின் உடலங்களை மண்ணில் புதைத்தவர்கள் தண்டனை அனுபவிப்பதாகவும்
வெளிப்படுத்திய விடயம் உள்நாட்டு நீதி என்பது ஏமாற்று நாடகம் என்பதை
உறுதிப்படுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றியது
இலங்கை அரசின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அவர்களை வழிநடத்திய
ஆட்சியாளர்களும் என்பதை சோமரத்னவின் செம்மணி தொடர்பான வாக்குமூலம் உறுதி
செய்கின்றது.
யுத்த காலத்தில் தொடர்ச்சியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும்
இலங்கை அரச படைகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை
வெளிப்படுத்தியுள்ளது.
புதைகுழிகள்
யுத்தகால இராணுவ முகாம்கள் மற்றும் இறுதிப் போரின் பின்னர் முல்லைத்தீவு
மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் யாவும் படுகொலை
செய்யப்பட்டவர்களின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளாக இருக்கும்
என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நீதிமன்ற
விசாரணைகள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதியை வழங்கமாட்டாது
என்பதுடன் பாதிப்புக்கள் யாவற்றுக்கும் சோமரத்ன ராஜபக்சவின் மனைவியின்
கடிதத்தில் சுட்டிக் காட்டிய சர்வதேச நீதிப் பொறிமுறையே தீர்வாகும் என
தெரிவித்துள்ளார்.