முன்னாள் அமைச்சர் தயா கமகேவிற்கு சொந்தமான காணியொன்றை ஏல விற்பனை செய்வதற்கான நடவடிக்கையின் போது, இடையூறு விளைவித்ததாக தயா கமகே மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிதி நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவர் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
முன்னாள் அமைச்சர் தயா கமகேவிற்கு சொந்தமான கண்டி, ஹாரகம பொலிஸ் பிரிவில் 19 ஏக்கர் 01 ரூட் 34 பர்ச்சஸ் பரப்பளவிலான காணியொன்று உள்ளது.
அடகு வைக்கப்பட்ட காணி
அதனை தனியார் நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்து தயா கமகே கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
எனினும், குறித்த கடன் தொகையை உரிய காலப்பகுதிக்குள் செலுத்தாமல் அவர் இழுத்தடிப்புச் செய்துள்ளார்.
இதனையடுத்து, கடன் தொகைக்கு ஈடாக தங்களிடம் அடகு வைக்கப்பட்ட காணியை ஏல விற்பனை செய்ய மேற்குறித்த தனியார் நிறுவனம் நேற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏல விற்பனை
எனினும், முன்னாள் அமைச்சர் தயா கமகே அதற்கு இடையூறு விளைவித்து ஏல விற்பனைக்கு முட்டுக்கட்டை போட்டதாக கூறி நிதி நிறுவனத்தின் முகாமையாளர் தலாத்து ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதேநேரம், குறித்த காணியை ஏல விற்பனை செய்ய மேற்கொண்ட முயற்சி சட்டவிரோதமானது என்று தயா கமகே சார்பிலும் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.